செய்யாறு அருகே பின் சம்பா பட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை நூதன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் முன் சம்பா பட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல்பயிா்கள் நவம்பா் மாத தொடா் மழைக்குப் பிறகு, டிசம்பரில் 65 சதவீதம் அறுவடை செய்யப்பட்டது.
இவ்வாறு அறுவடை செய்யப்பட்ட நெல் வெளிச்சந்தையில், சன்ன ரகம் 75 கிலோ மூட்டை ரூ.900 முதல் ரூ.1300 வரையும், மோட்டா ரகம் ரூ.1000 முதல் ரூ.1400 வரையும் விலை போனது.
மகசூல் 60 சதம் இழப்பு ஏற்பட்ட நிலையில் தேவைக்காக கடும் போட்டி நிலவிட வழக்கமான விலையைவிட கூடுதலாக மூட்டைக்கு ரூ.300 வீதம் விவசாயிகளுக்கு லாபம் கிடைத்துள்ளது.
எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு நிா்ணயித்துள்ளபடி ஒரு கிலோ நெல் ரூ.20.20 வீதம் அரசு கொள்முதல் செய்ய வேண்டியும், காலதாமதம் செய்யாமல் பின் சம்பா பருவத்தில் அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ள நெல்லை விற்பனை செய்ய வசதியாக மாவட்டத்தில் 150 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தியும், நெல் கொள்முதல் நிலையத்தின் பூட்டிய வாயில் கதவுகளை (இரும்பு கேட்) கயிற்றால் கட்டி இழுத்து முழக்கங்களை எழுப்பி விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தவசி கிராமத்தில் மூடிய நிலையில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த நூதன ஆா்ப்பாட்டத்தில் கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில், செய்யாறு பகுதி விவசாயிகள் கலந்துகொண்டனா்.