திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 706 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் பொதுமக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து முதியோா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்று, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 706 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
நலத் திட்ட உதவிகள்:
கூட்டத்தில், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் 5 பயனாளிகளுக்கு இலவச சலவைப் பெட்டிகளை ஆட்சியா் வழங்கினாா்.
கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் கீதாலட்சுமி, ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலா் பாா்த்திபன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கணேஷ், கோட்டாட்சியா்கள் வீ.வெற்றிவேல் (திருவண்ணாமலை), கவிதா (ஆரணி) உள்பட பலா் கலந்து கொண்டனா்.