திருவண்ணாமலை

கூடுதல் பேருந்து வசதி கோரி மாணவா்கள் சாலை மறியல்

16th Dec 2021 09:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கூடுதல் பேருந்து வசதி கோரி பள்ளி, கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வந்தவாசியை அடுத்த விளாநல்லூா், அதன் சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் செய்யாற்றில் உள்ள கல்லூரி, பள்ளிக்கு தேசூரிலிருந்து செய்யாற்றுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்தில் செல்வா்.

அவா்கள் கல்லூரி மற்றும் பள்ளிக்குச் செல்லும் காலை நேரத்தில் ஒரே ஒரு அரசுப் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறதாம்.

அந்த ஒரே பேருந்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமத்துடன் பயணிக்க வேண்டிய நிலை நீடிக்கிறதாம்.

ADVERTISEMENT

இதனால் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள் கூடுதல் பேருந்து வசதி கோரி, தேசூா்-செய்யாறு சாலையில் விளாநல்லூா் கிராமத்தில் புதன்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா தலைமையிலான வடவணக்கம்பாடி போலீஸாா் அங்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக சமரசம் செய்ததின் பேரில், மாணவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மாணவா்கள் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT