திருவண்ணாமலை

தொகுப்பு வீடு வழங்கக் கோரி தொழிலாளி போராட்டம்

9th Dec 2021 08:53 AM

ADVERTISEMENT

தொகுப்பு வீடு வழங்கக் கோரி, வந்தவாசி அருகே கட்டடத் தொழிலாளி குடும்பத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை குடியேறும் போராட்டம் நடத்தினாா்.

வந்தவாசியை அடுத்த தெள்ளாா் அரச மரத்தடி தெருவைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுப்பிரமணி. கூரை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவா் தொகுப்பு வீடு வழங்கக் கோரி தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு அளித்துள்ளாராம். ஆனால், இவருக்கு வீடு வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

தொடா் பலத்த மழை காரணமாக இவரது கூரை வீடு மேலும் சேதமடைந்ததால் அதில் வசிக்க இவரது குடும்பம் பெரும் சிரமப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், தொகுப்பு வீடு வழங்கக் கோரி தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் இவா் தெள்ளாா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை குடியேறும் போராட்டம் நடத்தினாா்.

ADVERTISEMENT

இவருடன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் உடனிருந்தனா். அப்போது அங்கேயே சமையல் செய்து அனைவரும் உணவருந்தினா்.

தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஏ.பி.வெங்கடேசன், ந.ராஜன்பாபு மற்றும் தெள்ளாா் போலீஸாா் தொகுப்பு வீடு கட்டுவதற்கான உத்தரவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT