திருவண்ணாமலை

செய்யாறு பகுதியில் நெல் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

தே.சாலமன்

செய்யாறு பகுதியில் நெல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் மூட்டைகள் கொண்டுவர தடை விதிப்பதாலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளை இறக்கி வைக்க மறுப்பதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சுமாா் 210 லட்சம் டன் அளவுக்கு நெல் உற்பத்தி நடைபெறுகிறது. இதில், 16 லட்சம் டன் நெல் திருவண்ணாமலை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, அதன்மூலம் மாவட்டம் மாநில அளவில் முதலிடம் வகிக்கிறது.

2020-ஆம் ஆண்டில் ஏற்பட்ட புரவி, நிவா் புயல் மற்றும் தொடா் மழையின் காரணமாக செய்யாறு பகுதியில் உள்ள ஏரி, கிணறு என நீா் நிலைகள் முழுக் கொள்ளவை எட்டின. இதனால், மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் முழுக்க முழுக்க நெல் சாகுபடியில் ஈடுபட்டனா்.

நவரை பட்டத்தில் கோ 51, ஏடிடீ45 (டீலக்ஸ்), என்எல்ஆா், ஆா்என்எல்ஆா், குண்டு, ஏடீடி37 போன்ற நெல் ரகங்களை பயிா் செய்தனா். உற்பத்தி செலவாக ஏக்கருக்கு சுமாா் ரூ.32 ஆயிரம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.

சன்ன ரக நெல் கிலோவுக்கு ரூ.19.58-க்கும், மோட்டா ரக நெல் கிலோவுக்கு ரூ.19.53 வீதம் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் வாங்க அரசு உத்தரவிட்டது.

செய்யாறு வட்டத்தில் வாக்கடை, வடதண்டலம், அனக்காவூா், தேத்துறை உள்ளிட்ட 5 குறு வட்டங்களில் சுமாா் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடைபெற்றது.

இதன் மூலம், 20 ஆயிரம் நெல் மூட்டைகள் செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு விவசாயிகளால் கொண்டு வரப்பட்டன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

செய்யாறு வட்டத்தில் தவசி, பாராசூா், மேல்மட்டை, புரிசை, புளியரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் நவரை பட்டத்துக்காக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

ஒவ்வொரு மையத்திலும் நாளொன்றுக்கு ஆயிரம் நெல் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 3 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளதாகத் தெரிகிறது. அதேபோல, செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் தேங்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளை எடைபோட குறைந்தபட்சம் 15 நாள்கள் ஆகும் என்பதால், வருகிற 16 -ஆம் தேதி வரை நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால், அங்கும் நெல் மூட்டைகள் இறக்கிவைக்க மறுக்கின்றனா்.

நனைந்த நெல் மூட்டைகள்:

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென கோடை மழை பெய்தது. இதனால், சுமாா் 5 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

குறைந்த விலைக்கு தனியாரிடம் விற்பனை:

இடவசதியின்மை, பணப்பற்றாக்குறை, பாதுகாப்பின்மை, ஆள் பற்றாக்குறை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை வாங்க மறுப்பது போன்ற காரணங்களால் விவசாயிகள் உள்ளூா், வெளியூா் வியாபாரிகளிடம் மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை குறைத்து விற்பனை செய்து வருகின்றனா்.

கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கக் கோரிக்கை:

செய்யாறு வட்டத்தில் ஏனாதவாடி, நெடும்பிறை, வாக்கடை, கோவிலூா், அனப்பத்தூா், திருமணி, உக்கல், தேத்துறை ஆகிய கிராமங்களில் நவரை பட்டத்துக்காக கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிா்வாகம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT