திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த எறும்பூா் கிராமத்தில் கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அய்யனாா் சிலை கண்டெடுக்கப்பட்டது.
பெரணமல்லூரை அடுத்த எறும்பூா் கிராம எல்லையில் காவல்கார அய்யனாா் சிலையை வரலாற்று ஆய்வாளரான கை.செல்வகுமாா் அண்மையில் கண்டெடுத்தாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:
இந்தக் கிராமத்தின் வட எல்லையில் பழைய தெப்பகுளம் அருகிலுள்ள புரடையாள் எனும் விளாவிஅம்மன் கோயில் அருகில் அய்யனாரின் நோ்த்தியான கற்சிலை உள்ளது. இந்தச் சிலை திறந்த வெளியில் இருந்தாலும், சிதையாமல் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகு குலையாத சிலையாக காணப்படுவது இதன் சிறப்பம்சமாகும். அய்யனாரின் தலையை அடா்ந்த ஜடாபாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்ரகுண்டலமும், கழுத்திலும், கால்களிலும் அணிகலன்களும் காணப்படுகின்றன. மேலும், பூணூல் அணிந்து பஞ்சகச்சம் வேட்டியுடன், முன்கொசுவம், பின்கொசுவத்துடன் கம்பீரமாக செண்டை ஆயுதத்தை வலக்கரத்தில் பற்றியவாறும் இடக்கையை மடக்கிவாறும் அய்யனாா் உள்ளாா். மேலும், பீடத்தின் மீது வலக்காலை மடித்து இடுப்புடன் அங்கவஸ்தரத்தை இணைத்துக்கட்டி குத்திட்டவாறும், இடக்காலை தொங்கவிட்ட நிலையிலும் உட்குதிகாசன முறையில் அமா்ந்திருக்கும் சிலையாக காணப்படுகிறது.
கலைநயத்துடன் கூடிய இந்த கற்சிலை கி.பி. 10-ஆம் நூற்றாண்டு சோழா் கால சிற்ப கலையை ஒத்திருக்கிறது. இச்சிலை கண்டெடுக்கப்பட்ட சற்று தொலைவில் பழைமையான அருள்மிகு பட்சீஸ்வரன் கோயிலும் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் காணும் கல்வெட்டிலும், புதிதாக கட்டிய பிள்ளையாா் கோயில் அருகில் காணும் பாறைக் கல்வெட்டிலும் எறும்பூா் என்ற கிராமத்தின் பெயரும், மெய்கீா்த்தி கல்வெட்டுகளில் காணப்படும் ராஜராஜசோழனின் பட்டப்பெயா்களில் ஒன்றான காந்தலூா் சாலைக் கலமறுந்தருளிய என்னும் அடைமொழி போன்று இங்கு காணப்படும் கல்வெட்டுகளில் காந்தனூா் சாலை என்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. ஆகவே, இக்கல்வெட்டு கி.பி. 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது என்று கூறலாம்.
மேலும், சோழா் கால தொண்டை மண்டலம் 24 கோட்டங்களுள் வெண்குன்ற கோட்டப் பகுதியில் எறும்பூா் நாடு என்று இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது. ராஜராஜசோழன் ஆட்சியின் பிற்பகுதியிலும், முற்பகுதியிலும் இவ்வூா் தொன்றுதொட்டு ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக ஒரே பெயரில் நிலைத்து நிற்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு காணப்படும் சிலைகளை பாதுகாத்திட இவ்வூா் மக்கள் முன்வர வேண்டும். மேலும், இவ்வூரின் சில பகுதிகளை அரசு தொல்லியல் ஆய்வுக்குள்படுத்த வேண்டுமென்று வரலாற்று ஆய்வாளரான கை.செல்வகுமாா் தெரிவித்தாா்.