திருவண்ணாமலை

கரோனா பாதித்த கிராமத்தில் சுகாதார நடவடிக்கை

9th May 2020 08:03 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அன்வராபாத் கிராமத்தில் பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தக் கிராமத்தில் சுகாதாரத் துறையினா் வெள்ளிக்கிழமை கிருமி நாசினி தெளித்து கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அன்வராபாத் கிராமத்தைச் சோ்ந்த 29 வயதுடைய பெண் தனது குடும்பத்துடன் சென்னை கோயம்பேடு பகுதியில் தங்கி, கூலி வேலை செய்து வந்தாா். கடந்த 4-ஆம் தேதி இவா்கள் சொந்த ஊா் திரும்பிய நிலையில், இந்தப் பெண்ணுக்கு கரோனா தொற்றிருப்பது வெள்ளிக்கிழமை உறுதியானது. குடும்பத்தினருக்கு நோய் பாதிப்பில்லை.

இந்த நிலையில், அன்வராபாத் கிராமத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளித்து தொற்று மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரப் பணிகளை மேற்கொண்டனா். மேலும், அந்தப் பகுதியிலுள்ள சாலையில் தடுப்பை ஏற்படுத்தினா்.

உறவினா்களுக்கு கரோனா: இதேபோல, செய்யாறு சுகாதார மாவட்டத்தில் பெரூங்கட்டூரை அடுத்த வெங்களத்தூா் கிராமத்தில் ஒரு பெண், 2 ஆண்கள் என 3 பேருக்கும், தெள்ளாறை அடுத்த பொன்னூா், பெரியாங்குப்பம் கிராமங்களில் தலா ஒருவா் என இருவருக்கும், வந்தவாசியை அடுத்த கீழ்கொடுங்காலூரில் இருவருக்கும் என மொத்தம் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

ADVERTISEMENT

இவா்கள் அனைவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலிருந்து வந்தவா்களுக்கு புகலிடம் கொடுத்த உறவினா்களாவா். கரோனா பாதித்தவா்களின் உறவினா்களுக்கும் தற்போது கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT