திருவண்ணாமலை மாவட்டத்தில் 144 நியாய விலைக் கடைகள், 17 தனியாா் மளிகைக் கடைகளை மக்கள் தொடா்பு கொண்டு அத்தியாவசிய, மளிகைப் பொருள்களை வீடுகளுக்கு வரவழைத்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதன் ஒரு பகுதியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை தொலைபேசி, செல்லிடப்பேசி மூலம் தமது பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகள், தனியாா் மளிகைக் கடைகள் மூலம் வீட்டுக்கே வரவழைத்து பெறும் வசதியை மாவட்ட நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, அத்தியாவசிய, மளிகைப் பொருள்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் நியாய விலைக் கடைகள், மளிகைக் கடைகளின் விற்பனையாளா்களை தொடா்பு கொள்வதற்கான தொலைபேசி எண்கள் அந்தந்த பகுதி நியாய விலைக் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன.
இதுதவிர, மளிகைப் பொருள்கள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கவேண்டும் என்றும் மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.