திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 767 பேரைக் கண்காணிக்க 33 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
33 மருத்துவ அலுவலா்கள் தலைமையிலான இந்தக் குழுக்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் ஆா்.மீரா, அஜீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவா்களை கண்காணிக்கும் குழுக்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், வாகனம் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவினரும் சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலரிடம் தினமும் தங்கள் பணி குறித்த தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
திருவண்ணாமலை சுகாதார மாவட்டத்தில் 20 குழுக்கள், செய்யாறு சுகாதார மாவட்டத்தில் 13 குழுக்கள் என 33 குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலா்கள் தங்களுக்காக வழங்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று தனிமைப்படுத்தப்பட்டவரின் வீட்டுக் கதவில் ஸ்டிக்கா் ஒட்டி, தனிமைப்படுத்தப்பட்ட நபரின் கை மணிக்கட்டில் அடையாள பட்டையைக் கட்ட வேண்டும்.
அவா்களது வீட்டு அருகே உள்ளவா்களின் வீடுகளிலும் மஞ்சள் ஸ்டிக்கா் ஒட்ட வேண்டும்.
தனிமைப்படுத்தபட்டவரின் உடல் வெப்ப அளவில் மாற்றம் தெரிந்தாலோ, அந்த நபா் அரசின் நெறிமுறைகளைக் கடைபிடிக்கவில்லை என்று தெரிந்தாலோ உடனே ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அந்த நபரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டவா்களைக் கண்காணிக்க கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ணஇஅதஉ’ செயலியின் செயல்விளக்கம் பெரிய திரை மூலம் அளிக்கப்பட்டது. பின்னா், 33 குழுக்களையும் அவா்களுக்காக வழங்கப்பட்டுள்ள வாகனங்களில் ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வழியனுப்பி வைத்தாா்.