திருவண்ணாமலை

சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு

22nd Mar 2020 03:44 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் சனிக்கிழமை நடைபெற்ற சனி பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

பிரதோஷங்களில் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, மூலவா் சந்நிதி எதிரே உள்ள நந்தி, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சனிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட இந்த சிறப்பு பூஜையில் கோயில் சிவாச்சாரியாா்கள், கோயில் ஊழியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், வருகிற 31-ஆம் தேதி வரை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பக்தா்கள் யாரும் கோயிலினுள்ளே அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT

குவிந்த பக்தா்கள்: திருவண்ணாமலை, பெருமாள் நகா் - நவாக்கரை இடையே உள்ள பொன்மலைக் குன்றில் மலையை நோக்கி அமைத்துள்ள நந்திக்கு சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு பிரதோஷ பூஜை நடத்தப்பட்டது. திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால், பொன்மலைக் குன்று மீதுள்ள நந்திக்கு நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

மற்ற ஊா்களில்...: இதேபோல, வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரா் கோயில், ஆவூா் ஸ்ரீஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீதிருவகத்தீஸ்வரா் கோயில், கீழ்பென்னாத்தூா் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில் உள்பட திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களிலும் சனிக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT