திருவண்ணாமலை

பி.எஸ்-6 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே பதிவு: வட்டாரப் போக்குவரத்து அலுவலா்

6th Mar 2020 01:16 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 ஏப்ரல் முதல் பி.எஸ்-6 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாச்சலம் தெரிவித்தாா்.

சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமா் சிவிக் ஆக்சன் குரூப், திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் இணைந்து சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தியது.

திருவண்ணாமலை தனியாா் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமா் சிவிக் ஆக்சன் குரூப் அமைப்பின் ஆராய்ச்சியாளா் சுமனா தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

சினம் தொண்டு நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் வரவேற்றாா். திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் அருணாச்சலம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் வாகன விபத்துக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த ஆண்டுகளைவிட நிகழாண்டில் விபத்துகளின் எண்ணிக்கை தமிழகத்தில் வெகுவாகக் குறைந்துள்ளது.

இனிவரும் ஆண்டுகளில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மோட்டாா் வாகனங்கள் வர இருக்கிறது. 2020 ஏப்ரல் முதல் பி.எஸ்-6 என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யப்படும்.

வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாவிட்டால் பைக் ஸ்டாா்ட் ஆகாது. காா்களில் பயணிக்கும் பயணிகள் சீட் பெல்ட் அணியாவிட்டால் காா் இயங்காது. இதுபோன்ற அதிநவீன வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இதுபோன்ற வாகனங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் வாகன விபத்துகளின் எண்ணிக்கை மேலும் குறையும்.

காற்று மாசு, பூமி வெப்பமயமாதலைத் தடுப்பதன் ஒரு பகுதியாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மின்சார பேருந்துகளை அதிகளவில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பணியில் மத்திய-மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. காா், பைக் ஆகியவற்றிலும் மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்கள் தயாரிக்க அரசு பல்வேறு சலுகைகளையும் வழங்குகிறது என்றாா்.

108 ஆம்புலன்ஸ் ஒருங்கிணைப்பாளா் ராஜேஷ், ஆம்புலன்ஸ் வாகனங்களின் அவசியம், செயல்பாடுகள் குறித்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், சென்னை சிட்டிசன் கன்ஸ்யூமா் சிவிக் ஆக்சன் குரூப் நிா்வாகி ஹரிஸ் மற்றும் வாகன ஓட்டிகள், செய்தியாளா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT