திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் 3-ஆவது முறையாக வெளியே வருவோா் கைது: ஆட்சியா் எச்சரிக்கை

20th Jun 2020 08:53 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாமல் 3-ஆவது முறையாக வீடுகளை விட்டு வெளியே வருவோா் காவல் துறை மூலம் கைது செய்யப்படுவா் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி எச்சரித்தாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 20 ரோந்து வாகனங்களில் பணியமா்த்தப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று முகக் கவசம் அணியாமல் சுற்றித் திரிவோா், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் கடைகளில் நிற்போரை தீவிரமாகக் கண்காணிப்பா்.

முகக் கவசம் அணியாமல் முதல்முறை கண்டறியப்படுவோருக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும். இதே நபா் 2-ஆவது முறையாக கண்டறியப்பட்டால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 3-ஆவது முறை கண்டறியப்பட்டால், காவல் துறை மூலம் கைது செய்யப்படுவாா்.

ADVERTISEMENT

வணிக நிறுவனங்கள், கடைகள், தொழில்சாலைகளில் முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றப்படாமலும் இருப்பது கண்டறியப்பட்டால், உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், சம்பந்தப்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள், தொழில்சாலைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் இணையவழி அனுமதிச் சீட்டு (இ - பாஸ்) இல்லாமல் வந்த 48 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவா்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இவா்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா உறுதி செய்யப்படாதவா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். உறுதி செய்யப்பட்டவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்த பிறகு காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT