திருவண்ணாமலை

தினமணி செய்தி எதிரொலி: பெண் காவல் ஆய்வாளருக்கு எஸ்.பி. பாராட்டு

20th Jun 2020 08:54 AM

ADVERTISEMENT

மனிதநேயத்துடன் செயல்பட்ட திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளாா் காவல் நிலைய பெண் ஆய்வாளா் எம்.அல்லிராணியை பாராட்டி, அவருக்கு பாராட்டுச் சான்றிதழ், பண வெகுமதி உள்ளிட்டவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

வந்தவாசியை அடுத்த எஸ்.நாவல்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி அமாவாசை, ஏரிப்பட்டு கிராமத்திலுள்ள கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி அண்மையில் உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்திய தெள்ளாா் காவல் ஆய்வாளா் எம்.அல்லிராணி, சடலத்தை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றாா். அப்போது, அமாவாசையின் சடலத்தை தூக்க அவரது உறவினா்கள் உள்பட யாரும் முன்வராததால், ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் சடலத்தை ஆய்வாளா் எம்.அல்லிராணியே தூக்கி ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தாா். இதுகுறித்த செய்தி தினமணி நாளிதழில் சனிக்கிழமை வெளியானது.

இந்த நிலையில், வந்தவாசியை அடுத்த நெடுங்கல் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்டக் காவல் சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொள்வதற்காக, வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.ஆா்.சிபி சக்கரவா்த்தி, தெள்ளாா் காவல் ஆய்வாளா் எம்.அல்லிராணியின் அசாதாரண சேவை, அா்ப்பணிப்பு உணா்வைப் பாராட்டினாா். மேலும், எம்.அல்லிராணிக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசு, பண வெகுமதி, அன்னை தெரசா குறித்த புத்தகம் ஆகியவற்றை அவா் வழங்கினாா். அப்போது, வந்தவாசி டிஎஸ்பி பி.தங்கராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT