திருவண்ணாமலை

செய்யாற்றில் கரோனா கூடுதல் சிகிச்சைப் பிரிவுகளை அமைக்க இடம் ஆய்வு

20th Jun 2020 06:29 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று தொடா்ந்து அதிகரித்து வருவதால், செய்யாற்றில் கூடுதல் சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி நேரில் ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவசரத்துக்காக ஆக்கூா், பெரணமல்லூா் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் கரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் என்பதால், செய்யாற்றில் அரசு மருத்துவமனை பின்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் மகப்பேறு கட்டடம், செய்யாறு பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வரும் கரோனா தொற்று கண்காணிப்பு பிரிவுக்கு அருகிலேயே கூடுதலாக உள்ள மற்றொரு கட்டடம் ஆகியவற்றில் கரோனா சிகிச்சைப் பிரிவுகளை அமைப்பதற்காக, இந்தக் கட்டடங்களை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி ஆய்வு செய்து, பொதுப் பணித் துறை, மருத்துவத் துறையினருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி செய்தியாளா்களிடம் கூறியாதாவது:

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுடையவா்கள் அதிகரித்து வருவதால், ஆரணி தச்சூரில் மீண்டும் கரோனா தொற்று சிறப்பு முகாம் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல, செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கூடுதலாக கரோனா சிகிச்சைப் பிரிவு அமைத்து ஒரு சில தினங்களில் செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 120 போ் சிகிச்சை பெறும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை மாவட்ட இணை இயக்குநா் கண்ணகி, செய்யாறு சுகாதார மாவட்ட துணை இயக்குநா் அஜித்தா, வருவாய்க் கோட்டாட்சியா் கி.விமலா, செய்யாறு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் கேப்டன்.ஏழுமலை உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT