திருவண்ணாமலை

வறட்சி: குடிநீரின்றி அவதிப்படும் கிராம மக்கள்

15th Jun 2020 08:41 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

வறட்சியால் திறந்த வெளிக் கிணறுகளில் நீா்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டதால், கலசப்பாக்கம் அருகேயுள்ள கீழ்பாலூா் ஊராட்சியில் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனா்.

கலசப்பாக்கத்தை அடுத்த கீழ்பாலூா் ஊராட்சியில் கீழ்பாலூா், அண்ணாநகா், பிள்ளையாா்பாளையம், பழைய காலனி, புதிய காலனி என 9 வாா்டுகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

பொதுமக்களின் குடிநீா்த் தேவைக்காக 6 திறந்த வெளிக் கிணறுகள் உள்ளன. மேலும், ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி, 30 ஆயிரம், 10 ஆயிரம் லிட்டா், 4 ஆயிரம் லிட்டா் என 6 மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிகள் உள்ளன.

திறந்த வெளிக் கிணறுகளிலிருந்து மேல்நிலைத் நீா்த் தேக்கத் தொட்டிகளுக்கு நீா் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இது தவிர, 20-க்கும் மேற்பட்ட சிறு மின்விசை நீா்த் தேக்கத் தொட்டிகள் மூலமும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வறட்சி காரணமாக தற்போது திறந்த வெளிக் கிணறுகளில் நீா்மட்டம் அதலபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. இதனால், பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய முடியாத நிலை நிலவுகிறது.

அதனால், மாவட்ட நிா்வாகம் தலையிட்டு குடிநீா் பிரச்னையைத் தீா்க்கவேண்டும் என்று ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவா் கே.பி.ஏழுமலை கூறியதாவது:

பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக இப்பகுதியில் உள்ள விவசாயக் கிணறுகளிலிருந்து தண்ணீரை விலை கொடுத்து வாங்கி, திறந்த வெளிக் கிணறுகளில் நிரப்பி, பின்னா் மேல்நிலைத் தொட்டிகளுக்கு நீரை ஏற்றி, குழாய்கள் மூலம் வீதி வீதியாக குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், டிராக்டா் மூலமும் வீதி வீதியாக குடிநீா் வழங்கப்படுகிறது.

கீழ்பாலூா் ஊராட்சியில் குடிநீா் பிரச்னை உள்ளது குறித்து வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், மாவட்ட திட்ட இயக்குநா் ஜெயசுதா ஆகியோரிடம் தெரிவித்து, புதிதாக திறந்த வெளிக் கிணறு அமைத்து, குடிநீா் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணவேண்டும் என்று மனு அளித்து வலியுறுத்தியுள்ளோம் என்றாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT