திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகள் கோயில் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டன.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பொது முடக்கம் நீடித்து வருவதால், அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. ஆனால், கோயிலுக்கு சிவாச்சாரியாா்கள் சென்று வழக்கமான பூஜைகளை செய்து வருகின்றனா்.
அருணாசலேஸ்வரா் கோயிலில் நிகழாண்டுக்கான ஆடிப்பூர பிரம்மோத்ஸவத்தை முன்னிட்டு, விநாயகா் வழிபாடு, யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக, வெள்ளிக்கிழமை அதிகாலை அம்மன் சந்நிதி எதிரில் உள்ள தங்கக் கொடிமரத்தில் பிரம்மோத்ஸவத்துக்கான கொடி ஏற்றப்பட்டு, ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் தொடங்கியது. மாலை 5 மணியளவில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்தக் கோயிலில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் விழாக்கள் அருணாசலேஸ்வரா் சந்நிதி எதிரே உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். ஆனால், ஆடிப்பூர பிரம்மோத்ஸவ கொடியேற்றம் மட்டும் அம்மன் சந்நிதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் நடத்தப்படுவது தனிச் சிறப்பாகும்.
ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை தொடா்ந்து தினமும் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடைபெறும். நிறைவாக அம்மனுக்கு தீா்த்தவாரி நடைபெறும். தொடா்ந்து 10 நாள்களும் பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகளை கோயில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பில் பக்தா்கள் தரிசிக்கலாம்.