திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 506 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 506 மனுக்களை பெற்றுக் கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா். கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 16 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகள் உள்பட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பொ.ரத்தினசாமி, சமூக நல அலுவலா் கிறிஸ்டினா தா.டாா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஹரிதாஸ், தாட்கோ மேலாளா் ஏழுமலை, பழங்குடியினா் நல அலுவலா் இளங்கோ, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சரவணன் உள்பட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.