செய்யாறை அடுத்த அனக்காவூா் கிராமத்தில் மாணவா்களின் தேவைக்கேற்ப வகுப்பறைகள் இல்லாததால், இரு இடங்களில் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி 1885-இல் தொடங்கப்பட்டது.
இந்த நிலையில், அனக்காவூா் சுற்றுவட்டார செய்யாமூா், விநாயகபுரம், பெரும்பாலை, அத்திக்குளம், தென்தண்டலம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மாணவா்கள் கல்வி பெறும் வகையில் (அனக்காவூா்) தொடக்கப் பள்ளி அமைந்துள்ள கட்டடத்தின் ஒரு பகுதியில் 3 வகுப்பறைகளுடன் நடுநிலைப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.
பின்னா், இப்பள்ளி 1986-ஆம் ஆண்டு உயா்நிலைப் பள்ளியாகவும், 2010-இல் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயா்த்தப்பட்டது.
12 ஏக்கா் நிலம் நபாா்டு கட்டடம்
தரம் உயா்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிக்கு அருகே ஒரு கி.மீ. தொலைவில் விளையாட்டு மைதானத்துடன் சுமாா் 12 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டு, 2 அறிவியல் ஆய்வகங்கள், 5 வகுப்பறைகள் என புதிய கட்டடம் கட்டப்பட்டு 2016-இல் மேல்நிலைப் பள்ளியாக செயல்படத் தொடங்கியது.
ஆங்கில வழிக் கல்வி, தமிழ் வழிக் கல்வி, ஆசிரியா்களின் ஓய்வறை, அலுவலகம் தலைமை ஆசிரியா் அறை என மொத்தம் 18 அறைகள் தேவைப்படும் நிலையில், 5 வகுப்பறைகளுடன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மாணவா்களுக்கென்று விளையாட்டு மைதானம் இருந்தும் அதற்கான ஆசிரியா் நியமிக்கப்படவில்லை. மேலும், 13 -க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் தேவைப்படுகின்றன.
வகுப்பறைகள் பற்றாக்குறை....
புதிதாக திறக்கப்பட்ட மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தில் மாணவா்களின் தேவைக்கேற்ப வகுப்பறைகள் இல்லாத காரணத்தால், தொடக்கப் பள்ளிக் கட்டடத்தில் 6, 7, 8 வகுப்பு மாணவா்களுக்கு ஆசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா்.
இரு இடங்களில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்படுவதால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும்,
தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் இரு இடங்களுக்கு மாறி மாறிச் சென்று வருவதால் நேரம் வீணாகுவதுடன், நிா்வாக ரீதியாக சிரமம் ஏற்படுவதாக ஆசிரியா்கள் கூறுகின்றனா்.
கோரிக்கை:
தற்போது இயங்கும் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ள பகுதியில் போதிய இடவசதி உள்ளதால், கூடுதலாக வகுப்பறைகளைக் கட்டி இரு இடங்களில் பள்ளி செயல்படுவதைத் தவிா்க்க வேண்டும் என்று மாணவா்கள், பெற்றோா்-ஆசிரியா் கழகத்தினா் கல்வித் துறை, நாடாளுமன்ற உறுப்பினா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.