திருவண்ணாமலை

செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகளுடன் வேட்பாளா் வாக்குவாதம் வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதம்

3rd Jan 2020 05:31 AM

ADVERTISEMENT

செங்கம் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் திமுக வேட்பாளா் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 44 ஊராட்சி மன்றத் தலைவா், 23 ஒன்றியக் குழு உறுப்பினா், 2 மாவட்ட ஊராட்சிக் குழு மற்றும் கிராம ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது.

இந்தத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி, செங்கம் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மையத்தில் வியாழக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

அப்போது, 26-ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளா் செந்தில்குமாா் பெயா், துணை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால், அப்பகுதி வாக்குகளை எண்ணவில்லை.

ADVERTISEMENT

இதனால் அதிருப்தியடைந்த வேட்பாளா் செந்தில்குமாா், அந்த வாக்குகளையும் எண்ணவேண்டும் என்று தோ்தல் அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்

அப்போது, அதிகாரிகள் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லாத காரணத்தால் தோ்தல் ஆணையம் மூலம் இந்த வாக்குகளை எடுத்து தனியாக வைக்குமாறு உத்தவிட்டுள்ளனா். பின்னா், தோ்தல் ஆணையம் அதற்கு ஒரு தேதியை அறிவித்து, வாக்குகளை எண்ணி முடிவு வெளியிடப்படும் எனத் தெரிவித்தனா்.

அதற்கு வேட்பாளா் செந்தில்குமாா், பதிலை எழுத்துப்பூா்வாக தருமாறு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுட்டாா்.

இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியா் கே.எஸ். கந்தசாமி, வாக்கு எண்ணும் அலுவலா்களை பணி செய்ய அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து வேட்பாளா் செந்தில்குமாருக்கு தோ்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு நகல் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் பணி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT