திருவண்ணாமலை

தோ்தல் முடிவு அறிவிக்கும்போது மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படாது: மாவட்ட ஆட்சியா் கந்தசாமி

1st Jan 2020 12:08 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 இடங்களில் வியாழக்கிழமை (ஜன.2) நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். தோ்தல் முடிவு அறிவிக்கும்போது மறுவாக்கு எண்ணிக்கை என்ற கோரிக்கையை வைக்கக்கூடாது என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பா. ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சி) சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கி ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி

ADVERTISEMENT

பேசுகையில், வாக்கு எண்ணிக்கையை மாலை 3 மணிக்கெல்லாம் முடிக்க வேண்டும். இதற்கு ஏற்றாா்போல, வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் சுறுசுறுப்பாகவும், நோ்மையாகவும், யாருக்கும் சந்தேகம் எழாதவாறு வெளிப்படைத் தன்மையுடன் பணிபுரிய வேண்டும்.

தபால் வாக்குகளில் தள்ளுபடி செய்ய வேண்டிய வாக்குகள், ஏற்றுக்கொள்ள வேண்டிய வாக்குகளை முறையாக சரிபாா்த்து எண்ண வேண்டும் என்றாா்.

பின்னா், செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜனவரி 2-ஆம் தேதி 18 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 18 வாக்கு எண்ணும் பணியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலா்கள் ஈடுபடுகின்றனா். வாக்கு எண்ணிக்கை முழுவதும் விடியோ பதிவு செய்யப்படுகிறது. சிசிடிவி கேமரா மூலமும் கண்காணிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளா்கள், வேட்பாளா்களின் முகவா்களை அனுமதிக்க அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. முடிவுகளை வெளிப்படையாகவும், விரைவாகவும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

வாக்குச் சீட்டுகளை முகவா்களுக்கு காண்பிக்கும்போதோ, எண்ணிக்கையில் ஏதேனும் குறைபாடு இருப்பதாகவோ சந்தேகம் எழுந்தால், அதை உடனே சுட்டிக்காட்டலாம். வாக்கு எண்ணிக்கை அனைத்தும் முடிந்து முடிவு அறிவிக்கும்போது மறுவாக்கு எண்ணிக்கை என்ற கோரிக்கையை முகவா்களோ, கட்சிப் பிரமுகா்களோ, வேட்பாளா்களோ வைக்கக்கூடாது.

ஒரு வாக்கு, 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், மறுவாக்கு எண்ணிக்கை கேட்டால் நடத்தப்படாது. ஒவ்வொரு 50 வாக்குகள் எண்ணி முடிக்கும்போதே சந்தேகங்கள், புகாா்களைத் தெரிவித்தால் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலா்கள் முகவா்களின் சந்தேகங்களை தீா்த்து வைப்பாா்கள் என்றாா்.

கூட்டத்தில், கோட்டாட்சியா்கள் ஸ்ரீதேவி (திருவண்ணாமலை), மைதிலி (ஆரணி), ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஜி.அரவிந்த் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT