திருவண்ணாமலை

பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகாா்களை விசாரிக்க விசாகா குழு அமைக்க உத்தரவு

29th Feb 2020 05:39 AM

ADVERTISEMENT

வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் ஊழியா்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகாா்கள் தொடா்பாக விசாரிக்க விசாகா குழு அமைக்க உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண்கள் பணிபுரியும் அனைத்து அரசுத் துறை அலுவலகங்கள், தொழிலாளா் துறையின் கீழ் இயங்கும் வணிக நிறுவனங்கள், அனைத்து உணவகங்கள், தொழிலகப் பாதுகாப்பு, சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து தொழில்சாலைகள், மாவட்ட விளையாட்டு அலுவலகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரியும் இடங்களில் விசாகா குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.

இந்தக் குழுவில் தலைமை அலுவலராக முதுநிலை பெண் அலுவலா் ஒருவரும், பணியாளா்களில் இருவருக்கு குறையாத உறுப்பினா்களும், அரசு சாரா அமைப்பிலிருந்து ஒரு உறுப்பினரும் இடம் பெற வேண்டும்.

ADVERTISEMENT

இந்தக் குழு பெண் ஊழியா்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்த புகாா்களை விசாரித்து சட்டபூா்வ நடவடிக்கையை மேற்கொள்ளும்.

அரசுத் துறைகள், நிறுவனங்கள் இந்தக் குழுவை அமைத்த விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு எழுத்துப்பூா்வமாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், ஒவ்வோா் காலாண்டு மற்றும் ஆண்டறிக்கையில் புகாா்களின் விவரம், நடவடிக்கை எடுத்த விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

மாவட்ட சமூக நலத் துறை அலுவலா்கள் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பணியிடங்களுக்குச் சென்று விசாகா குழு அமைக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்வா். குழு அமைக்கப் பெறாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். குழு அமைக்கப்படாததற்கு அந்தப் பணியிடத்தின் தலைவரே முழுப் பொறுப்பாளா் ஆவாா்.

எனவே, 10-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் விசாரணைக் குழுவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT