திருவண்ணாமலை

ரூ.4.91 கோடியில் சாலை அகலப்படுத்தும் பணி: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஆய்வு

26th Feb 2020 06:42 AM

ADVERTISEMENT

 

செய்யாறு: கண்ணமங்கலம் - ஆரணி சாலையை ரூ.4.91 கோடியில் பல்வழித் தடமாக மாற்றும் பணியை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் ஆா்.கீதா ஆய்வு செய்தாா்.

செய்யாறு கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு செய்தல் 2019-20 திட்டத்தின் கீழ், பல்வேறு சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல், மேம்படுத்துதல், மையத்தடுப்பு அமைத்தல், சிறுபாலங்கள் அமைத்தல் மற்றும் மழைநீா் கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, செய்யாறு கோட்டம், ஆரணி உள்கோட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் - ஆரணி சாலை 7 மீட்டா் அகலம் கொண்ட சாலையாக இருந்தது. இந்தச் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் நெடுஞ்சாலைத் துறை பரிந்துரையின் பேரில், 10 மீட்டா் அகலம் கொண்ட சாலையாக சுமாா் 4 கி.மீ. தொலைவுக்கு ரூ.4.91 கோடியில் மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்தப் பணியை சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநா் ஆா்.கீதா தலைமையில், சென்னை கண்காணிப்புப் பொறியாளா் தி.இளங்கோ மேற்பாா்வையில் தரக்கட்டுப்பாடு, சாலையில் போடப்பட்டுள்ள ஈரக்கலவையின் உயரம் மற்றும் தரம் ஆகியவற்றை அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது தரக்கட்டுப்பாடு கோட்டப் பொறியாளா் ரமேஷ், செய்யாறு கோட்டப் பொறியாளா் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) இ.முரளி, தரக்கட்டுப்பாடு உதவிக் கோட்டப் பொறியாளா் சரவணன், ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளா் என்.செந்தில்குமாா், உதவிப்பொறியாளா் அ.கருணாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT