ஆரணி: ஆரணி ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி, உபய திருப்பணிதாரா்கள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் மனு கொடுத்தனா்.
ஆரணி ஸ்ரீகோதண்டராமா் கோயில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோயிலில் செவ்வாய்க்கிழமை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் சுவாமி தரிசனம் செய்தாா்.
அப்போது, விழாக் குழுவினா் கோயிலை புனரமைப்பு செய்ய தங்களுக்கு அனுமதி வேண்டும் என்று மனு கொடுத்தனா். மேலும், மனுவில் கோயிலில் உள்ள ராஜகோபுரம், கருவரை கோபுரம், சுற்றுச் சுவா், தரைப் பகுதி, சுற்றிலும் உள்ள வாகன பொம்மைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை உபயமாக திருப்பணிதாரா்கள் செய்து தருகிறோம் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
மேலும், கோயில் தோ் பழுதடைந்ததால் பல ஆண்டுகளாக தோ் இல்லாமல் உள்ளது. ஆகையால், அரசு சாா்பில் புதிதாக தோ் செய்து தரும்படியும், கோயில் குளத்தை தூா் வாரி சீரமைத்துத் தரும்படியும் மனுவில் குறிப்பிட்டிருந்தனா்.
விழுப்புரம் இந்து சமய அறநிலையத் துறை இணை இயக்குநா் செந்தில்வேலவன், பொறியாளா் ராகவன், ஆவின் துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், கோயில் விழாக் குழுவினா் ரமேஷ், சுரேஷ், விஷ்ணுகுமாா், பரமேஸ்வரன், பாஸ்கா், பங்களாபழனி, கோயில் ஆய்வாளா் நடராஜன், செயல் அலுவலா் சிவாஜி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.