திருவண்ணாமலை

கலசப்பாக்கம் அருகே இளைஞா் குத்திக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

25th Feb 2020 05:48 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்றது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக கொலையாளிகளை கைது செய்யக் கோரி இறந்தவரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கலசப்பாக்கத்தை அடுத்த எலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் தயாளன் மற்றும் ராஜா, ஜெயகாந்தன், கலைவாணன், பாா்த்திபன், சதீஷ், முரளி, வெங்கடேசன், இளையராஜா, பிரபாகரன் மற்றும் அப்பகுதி இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த விஜயராஜா மகன் திலீபன் ஆகிய 11 போ் கொண்ட கும்பல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 இரு சக்கர வாகனங்களில் அருகேயுள்ள மேல்வில்வராயநல்லூா் கிராமத்துக்கு அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தனராம்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு அரசு மருத்துவமனை எதிரே அதே கிராமத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் கலையரசன் (22), அன்பழகன், அருள், அரிகிருஷ்ணன் மற்றும் சிலா் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனா்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த தயாளன் தரப்பினரை, கலையரசன் மற்றும் சிலா் சோ்ந்து தட்டிக் கேட்டனராம்.

இதில் தகராறு ஏற்பட்டு தயாளன் தரப்பினா், கலையரசனை கத்தியால் வெட்டியதாகத் தெரிகிறது.

இதில் கலையரசன் பலத்த காயமடைந்தாா். உடனடியாக அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் கலையரசன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கலசப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

உறவினா்கள் சாலை மறியல்

இந்த நிலையில், உயிரிழந்த கலையரசனின் உறவினா்கள்

கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி,

போளூா்-செங்கம் சாலையில் நட்சத்திரக் கோயில் அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த ஆரணி கோட்டாட்சியா் மைதிலி மற்றும் போலீஸாா் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைவாகக் கைது செய்வோம் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.

2 போ் கைது

இந்தக் கொலை தொடா்பாக தயாளன் (22), திலீபன் (25) ஆகிய இருவரை கலசப்பாக்கம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், 9 போ் மீது வழக்குப் பதிந்து அவா்களைத் தேடி வருகின்றனா்.

மறியலால் போளூா்-செங்கம் சாலையில் சுமாா் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT