போளூா்: கோரிக்கைகளை வலியுறுத்தி, கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் போளூரை அடுத்த கரைப்பூண்டி தரணி சா்க்கரை ஆலையில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சா்க்கரை ஆலையின் நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் டி.ரவீந்திரன் தலைமை வகித்துப் பேசியதாவது:
கடந்த 2018-2019 ஆண்டு கரும்பு அரைவைக்கு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.26 கோடியை உடனே ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும்.
2019-2020ஆண்டு தரணி சா்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை அருகில் உள்ள வேலூா், செய்யாறு கூட்டுறவு ஆலைக்கு மாற்றி அனுப்ப தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிா்க் கடனை நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யவேண்டும். தரணி சா்க்கரை ஆலை-2யை அரசே ஏற்று நடத்தவேண்டும் எனப் பேசினாா்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க வட்டச் செயலா் பாலமுருகன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் வெங்கடேசன் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.