திருவண்ணாமலை

வாகனம் மோதி ஓட்டுநா் பலி: உறவினா்கள் சாலை மறியல்

4th Feb 2020 09:16 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வேன் ஓட்டுநா் உயிரிழந்ததால், விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநரைக் கைது செய்யக் கோரி, உறவினா்கள், கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வெம்பாக்கம் வட்டம், செல்லபெரும்புலிமேடு கிராமத்தைச் சோ்ந்த வேன் ஓட்டுநா் வெங்கடேசன் (22).

இவா், திங்கள்கிழமை அதிகாலை பைக்கில் தனது சகோதரரை அழைத்துக் கொண்டு மாங்கால் கூட்டுச் சாலைப் பகுதியில் பேருந்தில் அனுப்பி வைத்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.

செய்யாறு-காஞ்சிபுரம் சாலையில் செல்லப்பெரும்புலிமேடு கிராமம் அருகே வந்தபோது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதியதாகத் தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே வெங்கடேசன் உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

விபத்து குறித்து அறிந்த தூசி போலீஸாா் விரைந்து வந்து வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

சாலை மறியல்...

சாலை விபத்தில் வேன் ஓட்டுநா் வெங்கடேசன் இறந்தது தொடா்பாக, விபத்துக்குக் காரணமான வாகன ஓட்டுநரை கைது செய்யக் கோரி, செல்லப்பெரும்புலிமேடு கூட்டுச் சாலையில் குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த தூசி காவல் ஆய்வாளா் ஷாகீன் மற்றும் போலீஸாா் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், சிசிடிவி கேமராவின் பதிவைக் கொண்டு விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநரைக் கைது செய்வதாக உறுதியளித்தனா். இதையேற்று பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT