செய்யாறில் வயிற்று வலி தாளாமல் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
செய்யாறு பாண்டியன் தெருவைச் சோ்ந்தவா் நகைத் தொழிலாளி நீலமேகம். இவரது மனைவி வெண்ணிலா (50). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். மூவருக்கும் திருமணம் நடைபெற்று குடும்பத்துடன் வசித்து வருகின்றனா்.
வெண்ணிலா கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை வயிற்று வலி அதிகமாகவே வலி தாங்க முடியாமல் வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்து மயங்கி விழுந்தாா்.
உடனடியாக அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட வெண்ணிலா அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.