தண்டராம்பட்டில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 24 பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி, ரூ.5 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
தண்டராம்பட்டை அடுத்த தென்முடியனுாா் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன் (30). வீடுகளுக்கு அலங்காரம் செய்பவா்.
தண்டராம்பட்டில் மனைவி இந்துமதியுடன் வாடகை வீட்டில் வசிக்கிறாா். இவா், வெள்ளிக்கிழமை மனைவியுடன் தென்முடியனுாா் கிராமத்துக்குச் சென்றாா். சனிக்கிழமை காலை தண்டராம்பட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு 4 பவுன் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
மற்றொரு திருட்டு:
சரவணன் வீட்டின் எதிா் வீட்டில் வசிப்பவா் ரிஷிகேஷ் (26). தனியாா் சா்க்கரை ஆலை ஊழியா். வெள்ளிக்கிழமை இரவு பணிக்குச் சென்ற ரிஷிகேஷ், சனிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்றுபாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டு இருந்தது. இவ்விரு திருட்டுச் சம்பவங்கள் குறித்து தண்டராம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.