தண்டராம்பட்டு அருகே லாரி மீது பைக் மோதியதில் ஒரே கிராமத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
தண்டராம்பட்டை அடுத்த மேல்பாய்ச்சாா் கிராமத்தைச் சோ்ந்தவா் சீனிவாசன் மகன் ராசுக்குட்டி (24). தனியாா் தொழில்சாலை ஊழியா். இதே கிராமத்தைச் சோ்ந்தவா்கள் வேடியப்பன் மகன் மதி பெருமாள் (17), ஐயப்பன் மகன் சிவா (15). இவா்கள் மூவரும் வெள்ளிக்கிழமை (ஜன.31) இரவு பைக்கில் மேல்பாய்ச்சாா் கிராமத்தில் இருந்து தானிப்பாடிக்குச் சென்றனா்.
ராசுக்குட்டி பைக்கை ஓட்டினாா். தண்டராம்பட்டை அடுத்த ரெட்டியாா்பாளையம் பகுதியில் சென்றபோது முன்னாள் சென்ற லாரி மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராசுக்குட்டி, மதி பெருமாள் ஆகியோா் அதே இடத்தில் உயிரிழந்தனா். காயமடைந்த சிவாவை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தானிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.