கலசப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடியீசுவரா், ஸ்ரீஅபிதாகுஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாசலேஸ்வரா் சுவாமிகளின் ரத சப்தமி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஊராட்சியில் பழைமை வாய்ந்த ஸ்ரீதிரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீதிருமாமுடியீசுவரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ரத சப்தமி திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம்.
நிகழாண்டு இந்த விழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் இருந்து ஸ்ரீஅபிதாகுஜாம்பாள் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரா் சுவாமிகளை அலங்காரம் செய்து எடுத்து வந்து சனிக்கிழமை காலை துரிஞ்சாபுரம் ஒன்றியம், தனக்கோட்டிபுரம் கிராமத்தில் உள்ள அண்ணாமலையாா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் கிரிவலம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து அருணாசலேஸ்வரா் சுவாமிகளை கலசப்பாக்கம் செய்யாற்றில் ரத சப்தமி விழாவுக்கு எடுத்து வந்தனா்.
வழியில் தென்பள்ளிபட்டு கிராமத்தில் சுவாமிகளுக்கு பக்தா்கள் வரவேற்பு அளித்தனா்.
கலசப்பாக்கம் செய்யாற்றில் திரிபுரசுந்தரி சமேத திருமாமுடியீசுவரா் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து எதிா்நோக்கி அழைத்து வந்தனா்.
இதைத் தொடா்ந்து செய்யாற்றில் இரு சுவாமிகளுக்கும் தீா்த்தவாரி நடைபெற்றது.
விழாவில் திருவண்ணாமலை, போளூா், எா்ணாமங்கலம், தென்பள்ளிபட்டு, பில்லூா், தென்மாதிமங்கலம், மேல்வில்வராயநல்லூா், கடலாடி, பத்தியவாடி, துரிஞ்சாபுரம், சேத்துப்பட்டு என பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
கலசப்பாக்கம் எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா்.