திருவண்ணாமலை

துரிஞ்சாபுரம் ஸ்ரீபாலசுப்ரமணியா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

1st Feb 2020 12:41 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சுமாா் 200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீபாலசுப்ரமணியா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

துரிஞ்சாபுரம் கிராமம், புஷ்பகிரி மலையில் சுமாா் 200 ஆண்டுகள் பழைமையான வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீபாலசுப்ரமணியா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயில் அண்மையில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. குறிப்பாக, ஸ்ரீவிநாயகா், இடும்பன் சந்நிதிகள், உத்ஸவா் மண்டபம், மலையேறும் சாய்வுப் பாதைகள் புதிதாக அமைக்கப்பட்டன.

மேலும், கோயில் கருவறை, உள், வெளிப் பிரகாரங்கள் கிரானைட் கற்களால் புதுப்பிக்கப்பட்டன. இதையடுத்து, இந்தக் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில், வேலூா் மாவட்டம் ரத்தினகிரி ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோா் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா்.

இரவு 8 மணிக்கு உத்ஸவா் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

விழாவில் துரிஞ்சாபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை நிா்வாகிகள் த.செழியன், சீ.வேலவன், திருப்பணிக் குழு நிா்வாகிகள் கோவிந்தராஜ், ராமலிங்கம், அருணாச்சலம், சதாசிவம், ரவி மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT