திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில் நடத்தப்படும் வங்கிப் பணி தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் மாவட்டத்தைச் சோ்ந்த தோ்வா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கிப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள வங்கி அதிகாரிகள் ‘புரபஷனரி ஆபீசா்ஸ்’ பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு தோ்வா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்வதற்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் நடத்தப்பட உள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்பு வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இணையதளம் மூலம் நடைபெறவுள்ளது. பாடப் பிரிவுகளுக்கு தனித்தனி ஆசிரியா்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன், ஒவ்வொரு வாரமும் மாதிரி தோ்வுகள் நடத்தப்படும்.
இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தோ்வா்கள் செவ்வாய்க்கிழமைக்குள் (ஆகஸ்ட் 25) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தங்களது பெயரை பதிவுசெய்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.