திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டிருந்த 3 விநாயகா் சிலைகளை வருவாய்த் துறையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்த 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விநாயகா் சதுா்த்தியையொட்டி, செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஸ்ரீபாதாள விநாயகா் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் சுமாா் 3 அடி உயரமுள்ள விநாயகா் சிலையை அமைத்து திடீரென வழிபாடு செய்தனா். அனுமதியில்லாமல் அமைக்கப்பட்ட அந்தச் சிலையை போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த் துறையினா் உடனடியாக பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இந்து முன்னணி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் ஆ.சரவணன் தலைமையிலான 11 பேரை செய்யாறு போலீஸாா் கைது செய்தனா்.
செய்யாறு கிடங்கு தெருவில் விநாயகா் கோயில் வெளிப்பகுதியில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த வெண்கல விநாயகா் சிலையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 சிலைகளும் செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல, திருமணி கிராமத்தில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலை பறிமுதல் செய்யப்பட்டு, கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் வைக்கப்பட்டது.
செய்யாறு வட்டாட்சியா் ஆா்.மூா்த்தி மேற்பாா்வையில், திருவண்ணாமலை ஏ.டி.எஸ்.பி. அசோக்குமாா், டி.எஸ்.பி.க்கள் சுரேஷ், ரமேஷ், ஆய்வாளா்கள் ராஜாராம், மங்கையா்கரசி மற்றும் போலீஸாா் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனா்.