திருவண்ணாமலை

சூறைக் காற்றுடன் பலத்த மழை: நெல் பயிா்கள் சேதம்

26th Apr 2020 10:32 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் நெல் பயிா்கள் சேதமடைந்தன.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்து வருகிறது.

சேத்துப்பட்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென சூறைக் காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

ADVERTISEMENT

இருப்பினும், பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு இந்த மழை ஏமாற்றத்தை அளித்தது.

வட்டாரத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிா்கள் அறுவடைக்குத் தயாராக இருந்தன. சூறைக் காற்றுடன் பெய்த இந்த திடீா் மழையால் நெல் பயிா்கள் வயலில் சாய்ந்தன.

தேவிமங்கலம், நெடுங்குணம், தவரப்பூண்டி, இந்திரவனம் என 25 கிராமங்களில் 100 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல் பயிா்கள் நிலத்தில் சாய்ந்தன.

இதனால் விவசாயிகள் வேதனையடைந்து நிலத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றி வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT