செங்கத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பேரூராட்சி செயல் அலுவலா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தாா்.
கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகள், பால், மளிகை, மருந்துக் கடைகளுக்கு மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர திறக்கப்படும் மற்ற கடைகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் அதிகாலை நேரத்தில் தடைசெய்யப்பட்ட நெகிழப் பொருள்கள் விற்பனை நடைபெற்று வந்துள்ளது.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலா் திருமூா்த்திக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, துப்புரவு ஆய்வாளா்கள் மற்றும் பணியாளா்கள் அந்தக் கடைக்குச் சென்று கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.ஒரு லட்சம் நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்து, கடையின் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.