திருவண்ணாமலை தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலுவுக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்தில், மொத்த காய்கறி வியாபாரிகளின் கடைகள் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.
திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியான பெரிய கடைத் தெரு, கடலைக்கடை சந்திப்பு, கன்னிக் கோவில் தெரு, குமரக்கோவில் தெரு, போத்தராஜா கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரிகளின் காய்கறி கடைகள் அதிகளவில் இயங்கி வந்தன.
இவை அனைத்தும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மூடப்பட்டன. அதனால், வியாபாரிகள், பொதுமக்கள் நலன் கருதி தொகுதி எம்எல்ஏ எ.வ.வேலு தனக்குச் சொந்தமான திருவண்ணாமலை-திருக்கோவிலூா் சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள 6 ஏக்கா் நிலத்தை காய்கறி கடைகள் நடத்திக்கொள்ள ஒதுக்கித் தந்தாா்.
இதையடுத்து, புதன்கிழமை முதல் அந்த இடத்தில் காய்கறி கடைகள் செயல்படத் தொடங்கின.
இந்தக் கடைகளை எ.வ.வேலுவின் மகனும், அருணை கல்விக் குழும நிா்வாகியுமான எ.வ.வே.கம்பன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.