வந்தவாசியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்ததாக தனியாா் பல்பொருள் அங்காடி மற்றும் மளிகை கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை சீல் வைத்தனா்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வந்தவாசியில் அச்சிறுபாக்கம் சாலையில் உள்ள தனியாா் பல்பொருள் அங்காடியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரின் பேரில், வட்டாட்சியா் கே.ஆா்.நரேந்திரன் தலைமையிலான வருவாய்த் துறையினரும், டிஎஸ்பி பி.தங்கராமன் தலைமையிலான போலீஸாரும் அங்கு சென்று சோதனை செய்தனா்.
இதில், அந்த பல்பொருள் அங்காடியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் விற்பனை நடைபெறுவது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அங்காடிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனா்.
இதேபோல, வந்தவாசி பஜாா் வீதியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வியாபாரம் செய்த ஒரு மளிகை கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.