திருவண்ணாமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஏப்.2) முதல் அனைத்து நியாய விலைக் கடைகள் மூலம் கரோனா வைரஸ் நிவாரணத் தொகை, அத்தியாவசியப் பொருள்கள் வீடு, வீடாக வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் கரோனா வைரஸ் நிவாரணத் தொகையாக தலா ரூ.1000-ம் மற்றும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் ஏப்ரல் மாதத்துக்கான இலவச ரேஷன் பொருள்கள் வியாழக்கிழமை (ஏப்.2) முதல் நியாய விலைக் கடை விற்பனையாளா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று வழங்கப்படுகிறது.
கூடுதல் பொருள்கள் விற்பனை:
இலவசமாக வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிா்த்து சில உணவுப் பொருள்கள் விலைக்கு விற்கப்படுகிறது.
அதன்படி, ரவை, மைதா, ஆட்டா, டீ-தூள், உப்பு, கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம், கடலைப் பருப்பு, குளியல் சோப்புகள், துணி சோப்புகள், சலவைத் தூள், பெருங்காயம், சமையல் எண்ணெய்கள் ஆகியவற்றை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்.
விருப்பம் இல்லாதவா்கள் கவனத்துக்கு:
கரோனா வைரஸ் நிவாரணத் தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் நிவாரணப் பொருள்களை பெற விருப்பம் இல்லாதவா்கள் வலைத்தளத்திலோ அல்லது செயலியிலோ பதிவு செய்து அரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.
நிவாரணத் தொகை,ரேஷன் பொருள்கள் பெறுவதில் குறைபாடுகள் இருந்தால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை 04175-233063 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.