திருவண்ணாமலை

குடிமராமத்துப் பணிகளை செப்.15-க்குள் முடிக்க உத்தரவு

7th Sep 2019 09:01 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளை வரும் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு திருவண்ணாமலை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அரசு முதன்மைச் செயலருமான தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறைகளின் செயலாக்கம் குறித்த மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் 
பா.ஜெயசுதா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ஜானகி, மகளிர் திட்ட அலுவலர் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருவண்ணாமலை மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் அரசு முதன்மைச் செயலருமான தீரஜ்குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு அனைத்துத் துறை அலுவலர்களுடன் அந்தந்தத் துறைகளின் செயலாக்கம் குறித்த ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில் அரசு முதன்மைச் செயலர் தீரஜ்குமார் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்துள்ள இந்த நேரத்தில், பொதுமக்களின் குடிநீர்த் தேவையை  நிறைவு செய்ய உள்ளாட்சிகள், பொதுப்பணித் துறை, குடிநீர் வடிகால் வாரியம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.
விரைவில் வடகிழக்குப் பருவமழை பெய்ய இருப்பதால், கொசுக்களால் ஏற்படும் நோய்களின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சுகாதாரத் துறையும், உள்ளாட்சி நிர்வாகமும் எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வரின் சிறப்புத் திட்டமான குடிமராமத்துத் திட்டத்தின் கீழ், பணிகளை செய்து வரும் பொதுப்பணித் துறை, நீர்வளஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகியவை அனைத்துப் பணிகளையும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், உதவி ஆட்சியர் (பயிற்சி) அனந்த் குமார், துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள், திட்டங்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT