திருவண்ணாமலை

சேலம் இடைத்தரகரை வெட்டிக் கடத்திய தந்தை, 2 மகன்கள் கைது

4th Sep 2019 10:09 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் சேலத்தைச் சேர்ந்த  இடைத்தரகரை கத்தியால் வெட்டி, காரில் கடத்திச் சென்ற சம்பவத்தில் வெம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தந்தையையும், அவரது இரு மகன்களையும் போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை ஸ்ரீரமணாஸ்ரமம் எதிரே பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் எதிரே ஞாயிற்றுக்கிழமை மாலை காரில் வந்த மர்ம நபர்கள் சிலர், அந்தப் பகுதியில் நின்றிருந்த ஒருவரைப் பிடித்துத் தாக்கி, கத்தியால் வெட்டினர். 
தாக்குதலில் காயமடைந்தவரை தாங்கள் வந்த காரிலேயே ஏற்றிக்கொண்டுச் சென்றனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். 
போலீஸார் வந்து அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின்னர், கேமராவில் பதிவாகியிருந்த காரின் அடையாளங்களை வைத்து காரை தேடும் பணியில் ஈடுபட்டனர். 
இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை இரவே தூசி காவல் நிலையத்தில் திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சுருட்டல் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன்ராஜ் என்பவர் சரணடைந்தார். 
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த இடைத்தரகர் கவுரிசங்கர் (50) என்பவரிடம் பொக்லைன் இயந்திரம் வாங்கித் தருமாறு ரூ.3.50 லட்சத்தை மோகன்ராஜ் கொடுத்தாராம். 
நீண்ட நாள்களாகியும் கவுரிசங்கர் பொக்லைன் இயந்திரத்தை வாங்கித் தரவில்லையாம். பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
எனவே, கவுரிசங்கரிடம் இருந்து பணத்தைப் பெற திட்டமிட்ட மோகன்ராஜ், புதிய செல்லிடப்பேசி எண்ணில் இருந்து கவுரிசங்கரை தொடர்பு கொண்டு பொக்லைன் இயந்திரம் விற்பனைக்கு உள்ளது. வந்து வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினராம். இதை உண்மை என்று நம்பிய கவுரிசங்கர் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலைக்கு வந்தாராம். 
ரமணாஸ்ரமம் எதிரே உள்ள பொதுப்பணித்துறை அலுவலகப் பகுதியில் கவுரிசங்கர் வந்தபோது மோகன்ராஜ், அவரது தந்தை மணி (58), தம்பி ஜெய்சங்கர் (28), உறவினர்கள் சேரிமுத்து (48), அருள் (31) ஆகியோர் சேர்ந்து கவுரிசங்கரை கத்தியால் வெட்டி, காரில் கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, சரணடைந்த மோகன்ராஜை திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜ், அவரது தந்தை மணி, தம்பி ஜெய்சங்கர் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சேரிமுத்து, அருள் ஆகியோரைத் தேடி வருகின்றனர். 
தாக்குதலில் காயமடைந்த கவுரி சங்கருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT