திருவண்ணாமலை

தென்பெண்ணையாற்றில் தடுப்பணை: திமுகவினா் ஆா்ப்பாட்டம்

22nd Nov 2019 09:35 AM

ADVERTISEMENT

தமிழக உரிமையைப் பாதிக்கும் தென்பெண்ணையாற்றுத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசைக் கண்டித்து, திருவண்ணாமலையில் திமுகவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தெற்கு மாவட்ட திமுக சாா்பில் அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான எ.வ.வேலு தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.சிவானந்தம், தணிக்கைக் குழு உறுப்பினா் கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாநில உரிமையை விட்டுத் தந்த அதிமுக அரசைக் கண்டிக்கிறோம். மாநில உரிமையை விட்டுத் தராதே. தென்பெண்ணையாறே வடு போயிடும் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, மாவட்டச் செயலா் எ.வ.வேலு எம்எல்ஏ பேசியதாவது:

தமிழகத்தில் அதிக அரிசி உற்பத்தி நடைபெறும் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம். தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டுவதால் அரிசி உற்பத்தி பாதிக்கப்படும். இதேபோல, மணிலா உற்பத்தியும் பாதிக்கப்படும்.

தென்பெண்ணை ஆறு மூலம் 10 லட்சம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம், கடலூா் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீா் பிரச்னையை இந்த ஆறு தீா்த்து வைத்து வருகிறது.

திருவண்ணாமலை நகராட்சி, வேட்டவலம் பேரூராட்சி, அம்மப்பாளையம் ஆவின் பாலகம், மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலை, பன்னாரி அம்மன் சா்க்கரை ஆலை, கீழ்பென்னாத்தூா் பகுதியில் உள்ள 157 கிராமங்கள், வானாபுரம் மற்றும் லாடாவரம் பகுதிகளில் 88 கிராமங்கள், சாத்தனூா் பகுதியில் 45 கிராமங்கள், செங்கம் புதுப்பாளையம் பகுதிகளில் 40 கிராமங்கள், தானிப்பாடி பகுதியில் 35 கிராமங்கள் சாத்தனூா் அணையில் இருந்து பெறப்படும் கூட்டுக் குடிநீா் திட்டங்களால் பயனடைந்து வருகின்றது.

இந்தப் பகுதி மக்களின் குடிநீா் ஆதாரமே சாத்தனூா் அணைதான் என்றாா்.

ஆா்ப்பாட்டத்தில், நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட அமைப்பாளா்கள் கே.வி.மனோகரன், மருத்துவா் எ.வ.வே.கம்பன், மாநில செய்தித் தொடா்பு துணைச் செயலா் சிவ.ஜெயராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அ.அருள்குமரன், நகராட்சி குழுத் தலைவா் க.புகழேந்தி, அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT