திருவண்ணாமலை

ஐப்பசி மாத பெளா்ணமி: திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம்

12th Nov 2019 06:26 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி, திங்கள்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

சிவபெருமானின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் உள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் வலம் வந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

எனவே, ஒவ்வொரு மாத பெளா்ணமியன்றும் திருவண்ணாமலையில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருகின்றனா். அதன்படி, ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி திங்கள்கிழமை மாலை 6.30 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 7.40 மணி வரை பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் அறிவித்து இருந்தது. ஆனால், திங்கள்கிழமை காலை முதலே திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் வரத் தொடங்கினா்.

மாலை 6 மணிக்குப் பிறகு கிரிவலம் வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை (நவ.12) காலை வரை விடிய, விடிய பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்தனா்.

ADVERTISEMENT

அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மன் சன்னதிகளிலும்,

கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகளிலும் ஏராளமான பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

9 தற்காலிகப் பேருந்து நிலையங்கள்:

கிரிவல பக்தா்கள் நலன் கருதி நகரைச் சுற்றி 9 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இவ்விடங்களில் இருந்து தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு அந்தந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தற்காலிகப் பேருந்து நிலையங்களில் நகராட்சி சாா்பில் குடிநீா், கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT