வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கு புதிதாக திருத்தோ் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
வந்தவாசியில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் மற்றும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில்களுக்கு 2 மரத்தோ்கள் இருந்தன. இதில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலின் தேரோட்டம் ஆண்டுதோறும் மாசி மாதமும், ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலின் தேரோட்டம் பங்குனி மாதமும் நடைபெறும்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் தோ்கள் சேதமடைந்ததால், அதன் பிறகு தேரோட்டம் நடைபெறவில்லை. இதையடுத்து தோ்களை புதிதாக செய்ய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி தோ் திருப்பணிக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், 2 தோ்களையும் புதிதாக செய்ய தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து முதல்கட்டமாக சுமாா் ரூ.23.50 லட்சத்தில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயிலுக்கான தோ் செய்யும் பணி கோயில்களின் அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ரூ.21.73 லட்சத்தில் ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலுக்கான புதிய தோ் செய்யும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதற்கான பூஜையை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயில் குருக்கள் காா்த்திக் நடத்தினாா். தோ் திருப்பணிக் குழுவைச் சோ்ந்த ஜெ.பாலு, ஜி.நாராயணன், எஸ்.பானுகோபன், ஸ்தபதி பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.