திருவண்ணாமலை மாவட்டத்தில் 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.
தமிழ்நாடு பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை, அரசு பொது சேவை மையம் மூலம் 7-ஆவது பொருளாதார கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், கல்வி நிறுவனங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள், வேளாண் சாா்ந்த மற்றும் சாராத பொருள்கள் உற்பத்தி, விற்பனை தொடா்பான விவரங்கள் சேரிக்கப்படும்.
இந்த கணக்கெடுப்புப் பணியை மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். திருவண்ணாமலை-வேலூா் சாலை, அறிவொளிப் பூங்கா எதிரே உள்ள வணிக நிறுவனத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், திருவண்ணாமலை கோட்டாட்சியா் ஸ்ரீதேவி, புள்ளியியல் துறை துணை இயக்குநா் எஸ்.ஜேக்கப் வேதகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளா்கள், களப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, திருவண்ணாமலை நகராட்சிக்கு உள்பட்ட அறிவொளிப் பூங்காவை சீரமைப்பதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை ஆட்சியா் கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.