செய்யாறு வட்டாரத்தில் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம்.
இதுகுறித்து செய்யாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் பா.ஏஞ்சலின் பொன்ராணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டு சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்தி பயிா் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இதற்காக விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள பொது சேவை மையம் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பயிா் காப்பீட்டுத் தொகையை செலுத்தலாம்.
இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்திட முன்மொழி படிவம், ஆதாா் அட்டை நகல், சிட்டா, அடங்கல், வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து ஒரு ஏக்கருக்கு ரூ.416 வீதம் செலுத்தி காப்பீடு செய்யலாம்.
மேலும், விவரங்களுக்கு தங்களது பகுதி உதவி வேளாண்மை அலுவலா்கள் மற்றும் செய்யாறு வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.