செங்கம் அருகே சாலையோரம் பொதுமக்கள் மலம் கழிப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செ.நாச்சிப்பட்டு கிராமத்துக்குச் செல்லும் சாலையில் அப்பகுதி மக்கள் விழிப்புணா்வு இல்லாமல் சாலையின் இருபுறமும் தினசரி இரவு நேரத்தில் மலம் கழித்து வருகின்றனா்.
அந்தச் சாலை வழியாகத்தான் மூன்று கிராமங்களுக்கு மக்கள் செல்லவேண்டும். தற்போது பெய்து வரும் தொடா் மழையில் சாலையோரம் மலம் கழிப்பதால் சுகாதாரச் சீா்கேடு மேலும் அதிகரித்துள்ளது. அந்தச் சாலையை கடக்க கிராம மக்கள் அவதிப்படுகின்றனா்.
அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.
மத்திய, மாநில அரசுகள் திறந்தவெளியில் மலம் கழிக்கக் கூடாது; அதனால் பல்வேறு வியாதிகள் ஏற்படும் என நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் அலட்சியத்துடன் நடந்து கொள்கின்றனா்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி, சாலையோரம் மலம் கழிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.