திருவண்ணாமலை/ போளூர்/ வந்தவாசி/ ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
ஒவ்வோர் ஆண்டும் மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டு மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால், கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, மாவட்டம் முழுவதும் உள்ள 860 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்தக் கூட்டங்களில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்ட அறிக்கை, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பது, பிரதமரின் குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், முழு சுகாதாரத் தமிழகம், முன்னோடி தமிழகம், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
வந்தவாசி: வந்தவாசி மற்றும் தெள்ளாறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இவற்றில், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை சார்ந்த புதிய திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த குறிப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. மேலும், தேவைப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குப்புசாமி, மயில்வாகனன் உள்ளிட்டோரும், தெள்ளாறு ஊராட்சி ஒன்றியத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணிதரன் உள்ளிட்டோரும் கிராம சபைக் கூட்டங்களை பார்வையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு: கலசப்பாக்கம் ஒன்றியம், பழங்கோவில் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்து பேசுகையில், கிராமப்புறங்களில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும். இயற்கை வளத்தை பாதுகாக்க வேண்டும். வீட்டைச் சுற்றிலும் கழிவு நீர், மழைநீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார்.
உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அரவிந்த் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருள், வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில் பொதுமக்கள் தனிநபர் கழிப்பறையை பயன்படுத்துவது குறித்து உறுதிமொழி ஏற்றனர்.
ஆரணி: சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம், இடையங்குளத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சிஅலுவலர் குமரேசன் தலைமை வகித்து பேசினார். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்பாபு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயபாலன், ஊராட்சிச் செயலர் வேலு மற்றும் ஊராட்சிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.