ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வழக்குரைஞர் சங்கத் தலைவர் ராஜமூர்த்தி தலைமை
வகித்தார். ஆரணி சார்பு நீதிபதி ஜெயவேலு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
மாணவர்கள் பள்ளிப்பாடத்துடன் பொது அறிவு வளர செய்தித்தாள்களையும் படிக்க வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் வழியில் யாரேனும் தொந்தரவு செய்தால், பள்ளி ஆசிரியர்களிடமோ, காவல் துறையினரிடமோ தகவல் தெரிவிக்க
வேண்டும்.
18 வயது நிறைவடைவதற்கு முன்னதாகவோ அல்லது விருப்பம் இல்லாமலோ பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்கக் கூடாது. அவ்வாறு திருமணம் செய்து வைக்க பெற்றோர்களோ, உறவினர்களோ முயற்சித்தால், உடனடியாக 1098 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். அல்லது ஆரணி நீதிமன்றத்தில் உள்ள வட்ட சட்டப் பணிகள் குழுவை தொடர்புகொண்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.எம்.டி.பி.சரவணன் வரவேற்றார். அரசு வழக்குரைஞர் வி.வெங்கடேசன், வழக்குரைஞர்கள் ஸ்ரீதர், தணிகாசலம் ஆகியோர் பங்கேற்றனர். பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) கருணாகரன் நன்றி கூறினார்.