போளூரில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மது விலக்கு அமல் பிரிவு போலீஸார் சார்பில் நடைபெற்ற பேரணியை போளூர் டி.எஸ்.பி. பிரகாஷ்பாபு கொடியசைத்து தொடக்கிவைத்தார். இதில், பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு காந்தி சாலை, அண்ணா சாலை, புதிய பேருந்து நிலையம், வேலூர் - திருவண்ணாமலை சாலை உள்பட நகரின் முக்கிய வீதிகள் வழியாக கள்ளச்சாராயம், போலி மதுபானம் ஒழிப்பு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
ஊர்வலத்தில் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி. பழனி, காவல் ஆய்வாளர் பிரேமா, உதவி ஆய்வாளர்கள் வள்ளியம்மாள், ஜெய்சங்கர், உடல் கல்வி ஆசிரியர் ஏழுமலை மற்றும் மாணவர்கள், போலீஸார் கலந்துகொண்டனர்.
முன்னதாக, போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.