திருவண்ணாமலை

அரசு மருத்துவமனைகளில் மருத்துவமனை தின விழா

31st Jul 2019 08:03 AM

ADVERTISEMENT

ஆரணி, கலசப்பாக்கத்தை அடுத்த கடலாடி அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை மருத்துவமனை தின விழா கொண்டாடப்பட்டது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் பிறந்த நாள் விழாவை மருத்துவமனை தின விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து ஆரணி அரசு மருத்துவமனையில் மருத்துவமனை தின விழா அரசு மருத்துவர் நந்தினி தலைமையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சுகாதாரத் துறை கண்காட்சியை கோட்டாட்சியர் மைதிலி தொடக்கி வைத்தார். ஆரணி டிஎஸ்பி செந்தில், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரின் உருவப்படத்தை திறந்துவைத்தார். பின்னர் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடைபெற்று சீர்வரிசை வழங்கப்பட்டது. குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு அம்மா குழந்தை பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது.  மேலும், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் மூத்த ஊழியர்களின் பணிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் அரசு மருத்துவர்கள் நித்யா, ரமேஷ், பாலகணபதி, ஜெயப்பிரகாஷ், செவிலியர்கள் ஜெகன், செல்லமாணிக்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  மருத்துவமனை தினத்தை கொண்டாட நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நன்றி தெரிவித்தனர்.
போளூர்: கலசப்பாக்கம் அருகேயுள்ள கடலாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற மருத்துவமனை தின விழாவில் 25 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், நோயாளிகளுக்கு வட்டார தலைமை மருத்துவர் கே.மணிகண்டபிரபு  வழங்கினார். மேலும்,  மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று நட்டு, பெண் குழந்தைகளைக்  காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என, கடலாடி ஊராட்சியில்  முக்கிய வீதிகள் வழியாக  ஊர்வலமாகச் சென்றனர். 
விழாவில் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT